×

தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை திரும்ப பெற நடவடிக்கை: காங்கிரஸ் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: தேசிய மருத்துவ ஆணையம் மாநிலங்களில் மருத்துவ படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கை மக்கள் தொகைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும் என்று முடிவு செய்திருக்கிறது. இந்த முடிவு மருத்துவத்துறையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிற செயலாகும். தென் மாநிலங்களில் தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறி முறைகளில் கூறப்பட்டுள்ள மருத்துவப்படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கையை விட அதிகமாக தற்போது இருந்து வருகிறது. இந்த முடிவு 2024-25 கல்வி ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டிருக்கிறது.

10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 மருத்துவ இடங்கள் என்று கொள்கை முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை, கோவை போன்ற மாநகரங்களில் நவீன மருத்துவ வசதி அதிகமாக இருப்பதால் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் மாநிலத்தில் மருத்துவ இடங்களை நிர்ணயிப்பது மக்களின் மருத்துவ தேவை பாதிக்கப்படும்.

அரசமைப்புச் சட்டத்தில் கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருந்தாலும் ஒன்றிய அரசு புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு ஆகியவற்றை தமிழகத்தின் மீது திணிப்பதன் மூலம் ஒன்றிய மோடி அரசு அரசமைப்புச் சட்டத்தை மீறுவதோடு, தமிழ்நாட்டில் உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிறது. ஒன்றிய அரசின் தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை உடனடியாக திரும்பப்பெறுவதற்கு மாநில உரிமைகளுக்காக குரல்கொடுத்து போராடி வருகிற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை திரும்ப பெற நடவடிக்கை: காங்கிரஸ் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : National Medical Commission ,Chennai ,Tamil Nadu ,Congress ,President ,KS Aglagiri ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...